சாத்தூர் மாரியம்மன் கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 27 ஆயிரத்து 236.600 கிராம் தங்க நகைகளை ஸ்டேட் வங்கி சாத்தூர் கிளையில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற.அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள கோயில்களை மூன்று மண்டலங்களாக பிரித்து இந்த கோயில்களிலிருந்து கிடைக்கும் தங்க நகைகளை சாமிக்கு பயன்படாத பட்சத்தில் அவற்றை மும்பையில் உள்ள மத்திய தங்கநகைகள் உருக்கும் தொழிற்சாலைக்கு அனுப்பிவைத்து அதனை உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்கிகளில் இருந்து பெறப்படும் வட்டி தொகைகளை கோயில்கள் திருப்பணிக்கு பயன்படுத்தவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிப்படைத்தன்மையாக இறைவனின் சொத்து இறைவனுக்கே பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் சாத்தூர் மாரியம்மன் கோயிலில் பெறப்பட்ட 27 ஆயிரத்து 236.600 கிராம் நகையை உருக்கி வங்கியில் ஒப்படைப்பதன் மூலம் ஆண்டுக்கு 24 லட்சம் கோவிலுக்கு வருமானமாக கிடைக்கும். இந்த வருமானம் கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தப்படும் என அவர் கூறினார்.