சீன நாட்டின் உளவுகப்பலான யுவான் வாங்-5 வருகிற 11ஆம் தேதி இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. நவீன தொழில்நுட்ப ரீதியில் பல தகவல்களை சேகரிக்கும் திறன்கொண்ட இந்த உளவுகப்பலை இலங்கை துறைமுகத்துக்கு சீனா அனுப்ப முடிவுசெய்தது. சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்த கப்பல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனினும் ராணுவ ரீதியிலான பல பயன்பாடுகளை இந்த கப்பல் கொண்டுள்ளதாகவும், நவீன தொழில் நுட்ப ரீதியில் பல தகவல்களை சேகரிக்கும் திறன்கொண்டதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. 11 -17ஆம் தேதி வரை இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு பல தகவல்களை சேகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையில் சீனாவின் உளவுக் கப்பல் இலங்கை துறைமுகப் பகுதிக்கு வருவதை அச்சுறுத்தலாக இந்தியா கருதிவந்தது. இவ்விவகாரத்தை உன்னிப்பாக கவனித்துவ் வருவதாகவும் இந்தியா கூறியது. அதன்பின் உளவுகப்பல் வருகையை ஒத்திவைக்கும்படி சீனாவிற்கு இலங்கை அரசானது கோரிக்கை வைத்துள்ளது. அத்துடன் சீன உளவுகப்பல் தங்களது நாட்டு துறைமுகதுக்கு வர இலங்கை மறுப்பு தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அதி நவீன உளவுகப்பலை அனுமதிக்க இலங்கை மறுத்தது குறித்து சீனா இப்போது கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, சில நாடுகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் எனும் பெயரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது முழுமையாக நியாயமற்றது என்று கூறினார். இவ்விவகாரத்தில் இந்தியாவின் பெயரை தெரிவிக்காத சீன வெளியுறவுத் துறை இந்தியாவை மறைமுகமாக விமர்சித்து இருக்கிறது.