கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு இந்தியா வழங்கும் கடன் உதவி திட்டத்தின் கீழ் 37, 500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை சென்றடைய உள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் 37,500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் தகவலை சிலோன் பெட்ரோலியம் கழகம் அறிவித்துள்ளது. இந்த 37,500 தன் பெட்ரோல் அடுத்த 25 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் முன்னதாக இலங்கைக்கு நேற்று வரப்பெற்ற 40 ஆயிரம் டன் டீசல் எரிபொருள் கிடங்குகளில் இறக்குமதி பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் புத்தாண்டு விழா கொண்டாட வசதியாக இந்திய அனுப்பிவைத்த 11 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான அரிசி தலைநகர் கொழும்புக்கு செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்துள்ளது. இந்த நிலையில் சிங்கள புத்தாண்டு புதன்கிழமையும், தமிழ் புத்தாண்டு வியாழக்கிழமையும் கொண்டாடப்படும் நிலையில் இந்தியாவில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட அரிசி கொழும்பு வந்துள்ளதாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் இந்த உதவி இரு நாடுகளுக்கும் இடையே பிரத்தியேக உறவை வெளிப்படுத்துவதாகவும், இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் எனவும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கப்படும் என இந்திய அண்மையில் அறிவித்திருந்தது. அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறையால் இலங்கை மக்கள் தவித்து வரும் சூழ்நிலையில் அவற்றின் இறக்குமதி மற்றும் இருப்பை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் கடனுதவி தற்காலிக தீர்வாக அமைந்து இருக்கிறது.
அதே சமயம் பல மணி நேரம் மின்தடையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் பொருளாதார நெருக்கடியும் முறையாக கையாளாத அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.