தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறது. அந்த வகையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் பீடிஇலை கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அருகே அமைந்துள்ள வேம்பார் கடலோர எல்லைக்குட்பட்ட பெரியசாமிபுரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சுப்பிரண்டு பிரதாபன் உத்தரவின் பெயரில் காவல் படை போலீஸ் கடலோரப் பகுதியில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்று அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து போலீசார் அதில் சோதனை செய்ததில் ஏராளமான பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிரித்துப் பார்த்தபோது அதில் பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரான ஜெயராம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் லாரியில் இருந்த பீடி இலைகள் போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் இலங்கை மதிப்பு சுமார் 45 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.