இலங்கை நாட்டிற்கு 2 டோர்னியர் 228 ரக ராணுவ விமானங்களை இந்தியா விரைவில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்களை அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்குகூட இன்னல் அடையும் நிலைமைக்கு தள்ளி இருக்கிறது. அதுமட்டுமின்றி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அடுத்தடுத்த அரசியல் தலைவர்களின் பதவி ராஜினாமா போன்ற காரணங்களாலும் இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலையே நிலவி வருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் 2 ராணுவ விமானங்களை அந்நாட்டுக்கு பரிசாக வழங்க இந்தியா முடிவுசெய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரீஸ், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் போன்றோர் சந்தித்து பேசிக் கொண்டனர். அப்போது 2 டோர்னியர் ராணுவவிமானங்களை இந்தியாவிடமிருந்து இலங்கை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இவற்றில் 2 ராணுவ விமானங்களை வழங்குவது உறுதிசெய்யப்பட்டது.
அதனடிப்படையிலேயே இப்போது இலங்கைக்கு 2 டோர்னியர் 228 ரக ராணுவ விமானங்களை ஒரிரு தினங்களுக்குள் ஒப்படைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனமானது இந்த டோர்னியர் ராணுவ விமானத்தை தயாரித்து இருக்கிறது. முழுக்கமுழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராணுவ விமானம் இப்போது இந்திய கடலோர காவல்படை, விமானபடை மற்றும் கடற்படையின் உளவு பிரிவுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.