பாம்பனில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து அங்குள்ள கடல் பகுதியில் இறங்கி இலங்கை அரசுக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பனில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர் எஸ்.பி ராயப்பன் தலைமையில் நடைப் பெற்ற இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் செயல்களை உடனடியாக நிறுத்த மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 56 பேரை உடனடியாக தமிழகம் அழைத்து வர தேவையான நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களை 3 படகுகளுடன் கைது செய்த சம்பவத்திற்கு கண்டனமும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி இரயில் போராட்டம் நடத்துவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எந்த தேதியில் ரயில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பது குறித்து கூடிய விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து பாம்பனில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.