இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை செய்த 47 மீனவர்களை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் சுமார் 56 மீனவர்கள் 6 விசைப்படகுகளுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 56 பேரையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து அவர்களை கடந்த மாதம் 25ஆம் தேதி விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 56 மீனவர்களின் 9 பேரை மட்டும் தமிழகத்திற்கு அழைத்து வந்த நிலையில் மீதமுள்ளவர்களை கொழும்புவில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இதனைதொடர்ந்து மீனவர்களின் குடும்பத்தினர் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் கொழும்புவில் இருந்த 47 மீனவர்களையும் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். இதன் பிறகு மீன்துறை அதிகாரிகள் வாகனங்களை ஏற்பாடு செய்து மீனவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமேஸ்வரம் மற்றும் நாகையை சேர்ந்த 44 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.