இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக பல பிரச்சனைகள் எழுந்துவரும் சூழ்நிலையிலும், தான் பதவி விலக மாட்டேன் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரசாயன உரங்களை தடை விதித்தது மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே நிதி உதவி கோராதது தமது தவறுதான் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்ற காலங்களில் தமது ஆட்சியில் என்ன குறைபாடு இருந்தாலும் தற்போதைய பொருளாதார சவால்கள், சிரமங்களை சமாளிப்பது தமது பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களின் ஆத்திரம் தமக்கு புரிகிறது என்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.