இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதற்கு எந்தவிதமான திட்டமும் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.
அந்நிய செலவாணி பற்றாக்குறையின் காரணமாக இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதனால் அந்த பொருட்களை பெற ஒவ்வொரு வாய்ப்பையும் இலங்கை பரிசீலனை செய்து வருகின்றது. இந்நிலையில் இலங்கை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் 50 கோடி டாலர் கடன் கேட்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இலங்கை மந்திரி காஞ்சனா விஜேசேகர தெரிவித்திருக்கின்றார். எக்சிம் வங்கியிடம் இலங்கை இதற்கு முன் ரூபாய் 3,750 கோடி கடன் பெற்று இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை போதுமான பொருளாதார கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்குப் புதிய நிதியுதவி வழங்க எந்த விதமான திட்டமும் இல்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில திட்டங்களை மதிப்பாய்வு செய்திருப்பதாகவும் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கும், ஏழைகள், விவசாயிகள், சிறு வணிகர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.