கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை புயலாகவும் வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில் இரவில் தீவிர புயலாக மாறியது. புயல் கரையை கடந்த நிலையில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி உள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக கொழும்பு மற்றும் பல்வேறு நகரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இலங்கையின் அனுராதாபுரம், திரிகோணமலை, புட்டலம், மகா இல்லுபள்ளம்மா, மற்றும் பொலன்னருவை போன்ற பகுதிகளில் புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று புயல் மற்றும் கனமழை காரணமாக 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2:30 மணியளவில் கரையை கடந்தது. மேலும் புயல் கரையை கடந்த நிலையிலும் இன்றும், நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.