இலங்கை நாட்டில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை அடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து அங்கு இருந்து தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார். இதனால் புது அதிபர் தேர்தல் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரம சிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பாக அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிட்டனர்.
மேலும் எதிர்க்கட்சி தலைவரும், சமாகிஜெய பலவேகயா கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவும் போட்டியில் இருந்தார். இந்த நிலையில் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக சஜித்பிரேமதாசா நேற்று திடீரென்று அறிவித்தார். அத்துடன் ஆளுங்கட்சி வேட்பாளர் டல்லஸ் அழகப்பெருமா வெற்றிபெற தன் கட்சியும், கூட்டணி கட்சிகளும் கடுமையாக பாடுபடும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து அதிபர் தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே, டல்லஸ் அழகப்பெருமா, அனுரா குமார திஸ்சநாயகே ஆகிய 3 பேர் களத்தில் இருந்தனர். அவர்களின் வேட்பு மனுக்கள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு இருந்தது.
இச்சூழலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. அடுத்ததாக உடனே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இந்நிலையில் அந்நாட்டின் புது அதிபராக ரணில் விக்ரம சிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடந்த அதிபர் தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே 134 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட டல்லஸ் அழகப்பெருமா 82 வாக்குகளும், அனுரா குமார திஸ்சநாயகே 3 வாக்குகளும் பெற்றனர். மொத்தமுள்ள 225 எம்.பி.களில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதற்கிடையில் 4 ஒட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. கோத்தபய பதவிக்காலமான 2024 வரை ரணில் விக்ரம சிங்கே இலங்கையின் அதிபராக பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.