இலங்கை கடற்படையினரை கண்டித்து மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையம் அருகே மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த மீனவரின் விசை படகை இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியுள்ளது. இதில் மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
எனவே உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வளாக வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசூராஜா தலைமை தாங்கியுள்ளார்.
இதனைதொடர்ந்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் எமரிட், தேவதாஸ், என்.ஜெ.போஸ், மகத்துவம், தட்சிணாமூர்த்தி, மீனவ மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.