இலங்கை தமிழர்களுக்கு 20,000 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலையில்லா சமையல் எரிவாயு, அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் புதிய வீடுகள் கட்டித் தருதல், குழந்தை கல்வி உதவி தொகை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிக்காக ரூ.317 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 106 முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்காக 20,000 குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக தான். அதனால் தான் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கை தமிழர் நல்வாழ்வு திட்டங்களை தொடங்கி உள்ளது. தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தால் என்ன அனைவரும் ஒருதாய் மக்கள் தான் என்று அவர் கூறினார்.