இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே இலங்கை தமிழர் நலன் குறித்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக இலங்கை அகதிகள் முகாம் என்ற பெயரை மாற்றி இலங்கை தமிழர் நலவாழ்வு முகாம் என அவர் உத்தரவிட்டார். இது பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் இலங்கை தமிழர் நல வாழ்வுக்காக ரூபாய் 317 கோடி ஒதுக்கி தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் நகை கடன் தள்ளுபடியில் இலங்கை தமிழர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து 106 இலங்கை தமிழர் முகாம்களிலும் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் வீடு கட்டும் பணிக்கு இன்று முதல்வர் அடிக்கல் நாட்டும் பணியை வேலூரில் தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 220 இலங்கை தமிழர்கள் குடும்பங்கள் உட்பட 3 ஆயிரத்து 510 பேர் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழர்கள் எங்கு வசித்தாலும் அவர்கள் ஒரு தாய் மக்களே ஆவர் மொழி, இனம், பண்பாடு அனைத்தும் அவர்கள் ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்று கூறினார்.
மேலும் இலங்கை தமிழர்கள் என்பது ஒரு அடையாள சொல்லே தவிர அவர்களும் தமிழர்கள்தான் என்று அவர் கூறினார். மேலும் பேசிய மு.க.ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் நம் சகோதர சகோதரிகளே ஆவார் அவர்கள் அகதிகள் அல்ல அவர்களும் தமிழர்களே எனவே அவர்களை இலங்கை தமிழர்கள் எனவே அழைக்க வேண்டும் எனக் கூறினார்.