பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் வரையில் அரசாங்கம் துணை நிற்கும் என அதிபர் கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சமீபத்தில் சர்வதேச தூதர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் வரை அரசாங்கம் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் எனவும், போராட்டக்காரர்கள் அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தும் போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இந்நிலையில் தலைநகர் கொழும்புவில் கூடாரம் அமைத்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியது தொடர்பாக தூதரக அதிகாரிகள் கேட்டதற்கு, அது முற்றிலும் பொய்யான தகவல் என ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். மேலும் அமெரிக்க தூதரான ஜூலி சங் போராட்டக்காரர்களை ராணுவத்தினர் பலவந்தமாக அப்புறப்படுத்தியதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க அது பொய்யான தகவல் என்று கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.