பொருளாதார நெருக்கடி, அன்னியசெலாவணி, எரிப்பொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என்று வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை நாடு தவிக்கிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும், சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதியமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதன் காரணமாக தற்காலிக தீர்வு கிடைத்தாலும் நாட்டின் நீண்டகால மேம்பாட்டுக்கு வழி தெரியவில்லை. இந்நிலையில் இப்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டுவர நீண்ட காலமாகும் என்று பிரதமரான ரணில் விக்ரம சிங்கே தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அவர் கூறியிருப்பதாவது “நம் பொருளாதாரம் இப்போது வீழ்ச்சியடைந்து வருகிறது.
அதனை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறோம். மத்திய வங்கியின் தரவுகளின்படி நம் பொருளாதார வளர்ச்சி விகிதம் மைனஸ் 4 – 5 வரை இருக்கிறது. அதேசமயம் மைனஸ் 6 -மைனஸ் 7 வரை உள்ளதாக சர்வதேச நிதியம் கூறி இருக்கிறது. ஆகவே இது மிகவும் நெருக்கடியான நிலை ஆகும். இந்த செயல் திட்டத்தில் நாம் உறுதியான பயணத்தை மேற்கொண்டால் 2023 ஆம் வருடம் இறுதியில் மைனஸ் 1 எனும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடையலாம். கடந்த 2021 ஆம் வருடம் ரூபாய் 17½ லட்சம் கோடியாக இருந்த அரசின் கடன்சுமை 2022 மார்ச் மாதத்திற்குள் ரூபாய் 21.6 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. சென்ற 2 (அல்லது) 3 வருடங்களில் மோசமாகி விட்ட நிலைமையின் விளைவுகளை இலங்கை நாடு அனுபவித்து வருகிறது.
இது அனைத்தும் 2 நாட்களில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் இல்லை. கடந்த பல வருடங்களாக நாம் கடைப்பிடித்து வந்த சில குறிப்பிட்ட பாரம்பரிய யோசனைகளின் விளைவுகளால் சிரமப்பட்டு வருகிறோம். ஆகவே நான் முன்பே கூறியதுபோன்று 2023 ஆம் வருடத்திலும் நாம் துன்பப்பட்டுதான் ஆகவேண்டும். அந்த அடிப்படையில் 2023ம் வருடம் இறுதிவரை நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் நம்பிக்கையில்லை. ஒரு திவாலான நாடாக சர்வதேச நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையானது வெற்றிகரமாக முடிந்தால் 4 வருடங்களுக்கு இலங்கைக்கு சர்வதேசநிதியம் கடன் வழங்கும்.
அதன்பின் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பொதுவான உடன்படிக்கை வாயிலாக கடன் வழங்கக்கூடிய அமைப்பை இலங்கை உருவாக்கும். எரிப்பொருள் தட்டுப்பாடும், உணவு பற்றாக்குறையும் தான் இன்று இலங்கை சந்திக்கும் பிரதான பிரச்சினைகளாகும். இதனிடையில் உக்ரைன் போர் இலங்கையின் நெருக்கடியை மேலும் மோசமாக்கிவிட்டது. இந்த நெருக்கடி நமக்கு மட்டுமல்லாது இந்தியா, இந்தோனேஷியா நாடுகள்கூட இந்த சர்வதேச நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நமக்கு வழங்கிய கடன் உதவியை இந்தியா குறைக்க வேண்டியதாகிவிட்டது. இலங்கை தன் வழிகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் ஒட்டுமொத்த நாடும் சிதைந்துவிடும்” என பிரதமர் தெரிவித்தார்.