போராட்டக்காரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இலங்கை நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதன் காரணமாக கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். அங்கிருந்து மறுநாள் சிங்கப்பூருக்கு சென்ற கோத்தப்பய தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு எதிராகவும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காலி முகத்திடலில் ஏராளமான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் நாளை மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் காலி முகத்திடலில் இருந்து வெளியேறாத போராட்டக்காரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.