சிங்கப்பூரிலிருந்து இலங்கை நாட்டிற்கு திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே என்று அந்நாட்டு அமைச்சரவை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை தவறாக கையாண்டார் என போராட்டம் வலுத்தது. முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் அவர்கள் குவிந்தனர். இதனை அடுத்து கொழும்புவில் உள்ள முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருள்களை அடித்து நொறுக்கினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் தப்பிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா ராஜபக்சே சிங்கப்பூருக்கு சென்றார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அதிபர் பதவியிலிருந்தும் விலகினார். புதிய அதிபருக்கான தேர்தலில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்று கொண்டார். இருப்பினும் அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் நடந்த அமைச்சரவைக்கான வாராந்திர செய்தியாளரிடம், இலங்கை அமைச்சரவையின் செய்தி தொடர்பாளர், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகங்களுக்கான மந்திரியாகவும் உள்ள குணவர்தனா கூறியதாவது, “இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி விட்டார் என்றோ, ஒளிந்து கொண்டு இருக்கிறார் என்றோ நான் நம்பவில்லைை” என்று அவர் கூறியுள்ளார். மேலும் சிங்கப்பூரிலிருந்து அவர் நாடு திரும்புகிறார். இருப்பினும் அவர் இலங்கை நாடு திரும்புவது பற்றிய வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. சிங்கப்பூருக்கு கடந்த 14 ஆம் தேதி கோத்தபயா ராஜபக்சே சென்றார். அவருக்கு 14 நாட்கள் குறுகிய கால அனுமதியை அந்நாட்டு அரசு அளித்தது. அதன்பின் சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சகம் கூறியதாவது, “கோத்தபய ராஜபக்சே எங்களிடம் தஞ்சம் எதுவும் கோரவில்லை என்றும் அவருக்கு தஞ்சம் அளிக்கவும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.