சீன உளவுகப்பல் யுவான் வாங்-5 சென்ற 11ஆம் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. அத்துடன் 17-ஆம் தேதிவரை அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தப்படும் என கூறப்பட்டது. எரிப்பொருள் நிரப்புதல் ஆகிய காரணங்களுக்காக அந்த கப்பல் வருவதாக கூறப்பட்டது. எனினும் அது உளவு பார்க்க வாய்ப்பு இருப்பதாக அதன் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் கப்பலின் வருகையை தள்ளிப்போடும்படி சீனாவிடம் இலங்கை தெரிவித்தது. இருப்பினும் அதற்குள் அந்த கப்பல் இந்திய பெருங்கடலில் நுழைந்துவிட்டது. இந்நிலையில் எதிர்பார்த்தவாறு சீன உளவுகப்பல் அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வரவில்லை. இதனை இலங்கை துறைமுக ஆணையமானது உறுதிசெய்தது. அம்பந்தொட்டையிலிருந்து 600 கடல் மைல் தொலைவில் அனுமதியை எதிர்பார்த்து அந்த கப்பல் காத்திருப்பதாக தெரிவித்தது.