இலங்கை -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி,ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையான முதல் டி20 போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.மேலும் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜஸ்டின் லாங்கர் கடந்த வாரம் திடீரென பதவி விலகியதால் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு அந்த அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்களுக்கு பதிலாக பென் மெக்டெர்மோட் ,ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.இந்நிலையில் இலங்கை அணியில் குசல் மென்டிஸ் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டியில் விளையாடாமல் இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் ‘நம்பர் ஒன்’ பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு பலமாகும்.
இதுவரை ஒட்டுமொத்த டி20 போட்டியில் இவ்விரு அணிகளும் 17 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 9 போட்டியிலும், இலங்கை அணி 8 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது . மேலும் சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இப்போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது . இப்போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.