புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால், திருநள்ளாற்றைச் சேர்ந்தவர் பத்ரிநாத் (38). இவர் புதுவையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். துளிர் உதவிக்கரம் அறக்கட்டளையை நடத்தும் இவர் மாணவர்களுக்கு மாற்று வழி கல்வித்திறன் குறித்து மாலை நேரப் பயிற்சி, பெண்கள் மேம்பாட்டுப் பயிற்சி, பல்லுயிர் பாதுகாப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறார். தற்போது வாசிப்பைப் பழக்கப்படுத்த மாலை நேர நடமாடும் நூலகத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுபற்றி பத்ரிநாத் கூறுகையில், “தாயின் விருப்பப்படி வீட்டில் நூலகம் அமைத்தேன். தந்தை வாங்கிய கார் வீட்டில் இருந்தது. கரோனாவால் இரண்டையும் பயன்படுத்த முடியாத சூழலை மாற்றவும், வாசிப்பைப் பழக்கப்படுத்தவும் மாலை நேர நடமாடும் நூலகம் அமைத்து, செயல்படுத்தத் தொடங்கியுள்ளேன். தற்போது காரில் ஐந்து வகைத் தலைப்புகளில், 1,200 புத்தகங்களை அடுக்குகளில் வைத்துள்ளேன். திங்களன்று கடற்கரைச் சாலை, செவ்வாயன்று தாவரவியல் பூங்கா, புதன்கிழமையன்று முதியோர் இல்லம், வியாழன்று கிராமப் பகுதி, வெள்ளியன்று பள்ளி அல்லது கல்லூரி செல்லத் திட்டமிட்டுள்ளோம்.
சனிக்கிழமையன்று குழந்தைகள் இல்லம், ஞாயிறன்று குடிசைவாழ் மக்கள் வாழும் பகுதியில் நூலகம் செயல்படும். தன்னார்வலர்கள் இருவர் உடன் உதவிக்கு வருகின்றனர். காரில் இருக்கும் நூல்களின் அடுக்கை வெளியே வைத்து மக்களே விருப்பப்பட்ட புத்தகங்களை எடுத்துப் படிக்கும் வாய்ப்பை உருவாக்குகிறோம். செல்போன் பயன்படுத்தும் வழக்கத்துக்குச் சிறிது இடைவெளி விட்டு, வாசிப்பைப் பழக்கப்படுத்தவே இம்முயற்சி. சில இடங்களில் படிக்க விருப்பம் இருந்தும், படிக்க இயலாதோருக்கு, தன்னார்வலர்கள் மூலம் படித்துக் காட்டுவதையும் செய்கிறோம்” என்று பத்ரிநாத் உற்சாகமாகத் தெரிவித்தார்.