இலவச பாடப் புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், நாகமலை, புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அன்பில் மகேஷ். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: “10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மதிப்பெண்களை கண்டு மனம் தளரக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது.
எனவே மதிப்பெண் குறைந்த மாணவ-மாணவியர்கள் தோல்வியடைந்து விட்டோம் என்ற விரக்தி அடையாமல் அடுத்தகட்டமாக தேர்வில் வெற்றி பெற்று தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட 10 உபகரணங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டு.ம் இதற்கு கட்டணம் வசூல் செய்யக்கூடாது. அப்படி கட்டணம் வசூல் செய்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி திறனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.