Categories
மாநில செய்திகள்

இலவச பை கிடையாது….. டிச.,30 முதல் 5 நாட்கள் பொங்கல் பரிசு டோக்கன்…. எந்தெந்த தேதி தெரியுமா?

டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 2ஆம் தேதியன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசியதாவது, டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும். டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய 5 நாட்கள் டோக்கன் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் எந்த கிழமைகளில் பொங்கல் தொகுப்பு பெறலாம் என்பது டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஒருநாளைக்கு நகரப் பகுதிகளில் 300 கார்டுகளுக்கும், ஊரகப்பகுதிகளில் 200 கார்டுகளுக்கும் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டோக்கன் வழங்கும்போது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சியர்கள் டோக்கன் வழங்குவது குறித்து முடிவு செய்வார்கள். 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை சேர்க்க ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் பொங்கல் தொகுப்புடன் வேறு சில பொருட்கள் வழங்க கோருவது குறித்து முதல்வர் பரிசீலனை செய்து முடிவு எடுப்பார். பொங்கல் பரிசு தொகை ரூபாய் 1000 நேரடியாக ரொக்கமாகவே வழங்கப்படும். மக்கள் தங்கள் வீட்டில் இருந்து பைகளை கொண்டு வர வேண்டும் என்றும், இலவச பை வழங்கப்பட மாட்டாது” என்று தெரிவித்தனர்.

 

Categories

Tech |