தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனையடுத்து சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்ட இன மக்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு பயனளிக்கும் விதமாக மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரத்தை வழங்க இருப்பதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20-45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் தையல் கலை பயிற்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி தையல் கலை பயின்றதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் 1 லட்ச ரூபாய்க்குள் இருத்தல் வேண்டும். அத்துடன் ஏற்கனவே தையல் இயந்திரம் பெற்றிருப்பவர்கள் 7 வருடங்களுக்கு மேல் ஆன பிறகே மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்த இலவச மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்துக்கு சென்று தேவையான ஆவணங்களுடன் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் சிறுபான்மையின மக்கள் இதை பெற்றுக்கொண்டு பொருளாதார நிலையில் தங்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கட பிரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.