மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு இலவச மடிக்கணினியை உடனே அரசு வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சென்ற 2020ம் வருடத்தில் தடைபட்ட அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை சீரடைந்த பின்பும் இன்றுவரை மீண்டும் தொடங்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கடந்த 2020-21, 2021-22 ம் வருடங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
நடப்பு ஆண்டில் மேலும் 51/2 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும். இன்றைய கல்விச்சூழலில் மேல்நிலை வகுப்பு மாணவா்களுக்கு மடிக் கணினிகள் மிகவும் அவசியமானவை ஆகும். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவா்களால் அதனை விலை கொடுத்து வாங்கமுடியாது. மடிக்கணினி வழங்க நடப்பு ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இந்த திட்டம் கைவிடப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதுபோன்ற நடவடிக்கை எதையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளக் கூடாது. ஆகவே தகுதியுள்ள அனைத்து மாணவா்களுக்கும் உடனே மடிக்கணினி வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளாா்