நாட்டில் 50 முதல் 60% சமையல் எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந்த பொருட்கள் மீதுள்ள வரி உயர்வால் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மீதுள்ள வேளாண் உள்கட்டமைப்பு செஸ் வரியானது 20 சதவீதத்தில் இருந்து குறைக்கப்பட்டது. இதனால் இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத பாமாயில் மீதுள்ள கலால் வரி 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சுத்திகரிக்கப்படாத சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெயின் கலால் வரி 5 சதவீதமாக குறைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் அடிப்படைப்படியான கலால் வரி 17.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சோயா மற்றும் சூரிய காந்தி எண்ணெயின் அடிப்படை கலால் வரி 32.5 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வரி குறைப்பால் நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலையானது லிட்டருக்கு 5 -20 ரூபாய் வரை குறையும் என மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.