தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் யாரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி இதனை தெரிவித்துள்ளார். ஓமலூரில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பேட்டி அளித்த அவர், கூட்டுறவு சங்கங்களில் நடந்துள்ள நகைக்கடன் மோசடி தொடர்பாக தெளிவான விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றார்.கூட்டுறவு சங்கத்தில் இருப்பவர்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கிடையாது. சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றவர்கள். முறைகேடு நடந்தால் நடவடிக்கை எடுப்பது எல்லா அரசின் கடமை.
நான் முதலமைச்சராக இருக்கும்போது கூட சில வங்கிகளில் முறைகேடு நடைபெற்றது. அங்கு கண்டுபிடித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். அதே போல எங்காவது முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. எல்லா இடத்திலும் முறைகேடு நடைபெற்றதாக தகவல் இல்லை. சொல்லி இருக்கிறார்கள் எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது என்ற விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
டெல்லியில் ஆயிரம் எம்பிக்கள் அமரும் வண்ணம் நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதை எடப்பாடி பழனிச்சாமி நினைவு கூர்ந்தார். ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். கடலூர், விழுப்புரம், திருப்பத்தூரில், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கு மழையில் நனையும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.