நாடு முழுவதுமுள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டு முதல் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. சி.யு.ஈ.டி எனப்படும் இந்த தேர்வை எழுத 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 மாணவர்கள் பதிவுசெய்து இருக்கின்றனர். இந்த நிலையில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.
அதாவது இளங்கலை படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வானது வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த தேர்வு நாடு முழுதும் வருகிற ஜூலை15, 16, 19, 20 மற்றும் ஆகஸ்ட் 4, 5, 6, 7, 8, 10 போன்ற தேதிகளில் கணினி வழித் தேர்வாக நடைபெற உள்ளது. நாடு முழுதும் 554 நகரங்களிலும் வெளிநாடுகளில் 13 நகரங்களிலும் இந்தி, தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற இருக்கிறது.
தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இதுவரையிலும் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்றும், நாளையும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அத்துடன் இதுவரை விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது. மேலும் விபரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேசிய தேர்வு முகமை இணையதளங்களை – cuet.samarth.ac.in மற்றும் nta.ac.in-ஐ தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பொது நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பிரதிபலிப்பதால், சிபிஎஸ்இ தவிர்த்து பிற வாரியங்களில் பயின்ற மாணவர்களுக்கு இது பாதகமாக இருக்கும் என விமர்சகர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.