திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சமுதாயத்தை அறிவார்ந்த நிலையை உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் கடமை. அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.