இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்ணலம் கிராமத்தில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு லட்சுமிக்கு பிரகலாதன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே பிரகலாதன் அவரது தந்தை தனுசு, தாய் மாரியம்மாள் ஆகியோர் இணைந்து வரதட்சணையாக 50 ஆயிரம் ரூபாய் பணம், 2 1/2 பவுன் தங்க நகை ஆகியவற்றை வாங்கி வருமாறு லட்சுமியை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி கடந்த 2016-ஆம் ஆண்டு தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரகலாதன், தனுசு, மாரியம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பிரகலாதனுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.