பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் சுகன்யா என்பவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சுகன்யா புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது கணவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி இரவு நேரத்தில் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுகன்யா, அருண், லெனின் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக சுகன்யா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் பெட்ரோல் ஊற்றியதால் தீ விபத்து ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதே பகுதியில் வசிக்கும் குமார்(56) என்பவர் கடையிலிருந்து வெளியேறி பெட்ரோல் வாங்கி சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
பின்னர் போலீசார் குமாரை பிடித்து விசாரித்த போது கடந்த 2 ஆண்டுகளாக குமார் சுகன்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது பற்றி சுகன்யா குமாரின் மனைவியிடமும், மகனிடமும் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த குமார் சுகன்யா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.