கேரளா இளம் பெண் கற்பழிப்பு சம்பவத்தை அடுத்து வாடகைகார்கள், ஆட்டோக்களை இயக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களை பணியில் சேர்க்க தடைவிதித்து காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பெங்களூருவில் இரவு வேளையில் வாடகை கார்கள், ஆட்டோக்கள், பைக், டாக்சியில் பயணிக்கும் பெண் குழந்தைகள், பெண்கள் சில சமயங்களில் அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்கின்றனர்.
அதாவது பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் வாடகைகார், ஆட்டோ நிறுவனங்களில் பணிக்கு விண்ணப்பிக்கும் டிரைவர்களின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். 112 அவசர சேவை எண் பற்றி பயணிகளுக்கு செயலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குற்றப்பின்னணி கொண்ட டிரைவர்களை எந்த காரணம் கொண்டும் பணியில் சேர்க்கக்கூடாது.
ஓட்டுநர்கள் நடத்தை குறித்து மாதம் ஒரு முறை கண்காணிக்க வேண்டும். அத்துடன் உணவு விற்பனை பிரதிநிதிகள் உரிய முகவரிக்கு சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்ய வேண்டும். வாடகைகார், ஆட்டோ டிரைவர்கள், உணவு விற்பனை பிரதிநிதிகள் ஏதாவது தவறு செய்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் பொறுப்பு. மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.