பிரித்தானியாவில் 20 வயதுடைய இளம் பெண் அளித்த புகாரின் பேரில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் 20 வயதுடைய இளம் பெண் அளித்த வன்கொடுமை குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி கைது செய்யப்பட்டிருக்கிறார். குற்றம் சாட்டியுள்ள பெண் முன்னாள் பாராளுமன்ற ஊழியர் ஆவார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில், எம்.பி. தன்னை தாக்கியதாகவும், தன்னை தவறு செய்ய வற்புறுத்தியதாகவும், அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கிய நான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது என்று குற்றம்சாட்டி இருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை மேற்கொண்டு இருப்பதாக பெருநகர காவல் துறையினர் கூறியுள்ளனர். கடந்த ஜூலை 31 ஆம் தேதியன்று பாலியல் குற்றங்கள் மற்றும் தாக்குதல் என நான்கு தனித்தனியான சம்பவங்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை பெற்றிருப்பதாக பெருநகர காவல் துறையினர் கூறியிருக்கின்றனர்.
அந்த குற்றங்கள் அனைத்தும் சென்ற வருடம் ஜூலை மாதம் முதல் இந்த வருடம் ஜனவரி மாதம் வரை வெஸ்ட்மின்ஸ்டர், லம்பேத் மற்றும் ஹாக்னியில் இருக்கின்ற முகவரிகளில் நடந்திருப்பதாக தகவல் அளித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக 50 வயதான கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள எம்.பி ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் விசாரணை க்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதுபற்றி கன்சர்வேடிவ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “அனைத்து குற்றச்சாட்டுகளையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். இந்த சம்பவம் தற்போது காவல்துறையினர் கைகளில் இருப்பதால், மேலும் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது” என்று கூறியுள்ளார்.