நகைக்கு ஆசைப்பட்டு காதலனே இளம்பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் அரியூர் நாடு அருகே உள்ள பரவாத்துபட்டியில் பங்காரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் ரேணுகா கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திடீரென மாயமாகி உள்ளார். இது குறித்து பங்காரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி பரவாத்துபட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது.
இதனையரிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த எலும்புக்கூடு மீட்டு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அந்த பரிசோதனை முடிவில் அந்த எலும்புக்கூடு 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காணமல் போன ரேணுகா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ரேணுகா அதே கிராமத்தை சேர்ந்த ரஜினி என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
அப்போது ரஜினி ரேணுகா அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை கேட்டுள்ளார். இந்நிலையில் ரேணுகா சங்கிலியை தர மறுத்ததால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரஜினி அருகில் இருந்த ஒரு பாறையை எடுத்து ரேணுகா தலையில் போட்டுள்ளார். இச்சம்பவத்தில் ரேணுகா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ரஜினி ரேணுகாவின் உடலை அவசர அவசரமாக மண்ணை மூடி விட்டு தப்பி ஓடியது விசாரணையில் வெளிவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரஜினியை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.