இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.
சென்னை மாவட்டத்திலுள்ள பல்லவன் சாலை எஸ். எம் நகரில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜாவுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது சுதாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 5 பவுன் தங்க நகை, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றை கொடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு வரதட்சணை கேட்டு ராஜா அவரது சகோதரி ஆனந்தி ஆகியோர் சுதாவை துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சுதா கடந்த 2016-ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜா, ஆனந்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜாவுக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் ஆனந்திக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.