உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியில் ஒரு ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த ரிசார்ட் பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வினோத் ஆரியாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானது. இந்த ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா என்ற இளம் பெண் விபச்சாரத்திற்கு ஒத்துழைக்காத காரணத்தினால் புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட்டில் வேலை பார்த்த 2 ஊழியர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உத்ரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புல்கித் ஆர்யா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதோடு சம்பந்தப்பட்ட ரிசார்ட்டை இடிப்பதற்கு முதல்வர் உத்தரவிட்டதோடு, பாஜக கட்சியில் இருந்து புல்கித் ஆர்யாவின் தந்தை வினோத் ஆர்யா மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோர் நீக்கப்பட்டனர். இந்நிலையில் ரிசார்ட்டில் முன்னதாக வேலை பார்த்த பணியாற்றியவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ரிக்ஷிதா மற்றும் விவேக் பரத்வாஜ் என்ற தம்பதிகளிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது கணவன்-மனைவியான ரிக்ஷிதா மற்றும் விவேக் பரத்வாஜ் செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு ரிசார்ட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே ரிசார்ட்டில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொண்டனர். அதாவது ரிசார்ட்டில் வரும் விருந்தினர்களுக்கு போதைப் பொருட்கள் மற்றும் பெண்களை புல்கித் ஆர்யா வழங்கியுள்ளார். இதனால் ஆபத்தை உணர்ந்து கொண்ட கணவன்-மனைவி இருவரும் ஒரு நாள் இரவு யாருக்கும் தெரியாமல் 10 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்று சொந்த ஊருக்கு பேருந்தில் ஏறி சென்று விட்டனர்.
இவர்கள் ஊருக்கு வந்த பிறகு ரிசார்ட்டில் வேலைபார்க்கும் ஊழியர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மீண்டும் வேலைக்கு வருமாறு கணவன்-மனைவியிடம் கூறியுள்ளனர். அதன் பிறகு காவல் நிலையத்தில் தங்களுடைய ஊழியத்தை பெறுவதற்காக கணவன்-மனைவி இருவரும் புகார் கொடுத்த போதிலும் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் தங்களின் மேல் ஒரு போலியான திருட்டு குற்றத்தை சுமத்தி ஒரு மன்னிப்பு கடிதம் வாங்கிவிட்டு எங்களை ஒரு குற்றவாளிகள் போல் நடத்தினார்கள் என்றும் கூறியுள்ளனர். மேலும் அங்கிதா கொலை வழக்கை தொடர்ந்து கணவன்-மனைவி இருவரின் வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.