தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விருதை கடந்த ஆண்டு மூத்த தலைவர் எண் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு தகைசால் தமிழர் விருதுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் போராடியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற விருது வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையின் ஈடுபட்டு, போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையில் கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்தவரும், சமூக நல்லிணக்கத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்து சிறந்த தன்னலமற்ற அரசியல் வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு ஆர் நல்லகண்ணு அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருது வழங்க தேர்வு குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகின்றது.
வருகிற ஆகஸ்ட் 15 திங்கள் கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவில் மு க ஸ்டாலின் அவர்களால் இந்த விருது ஆர் நல்லகண்ணுக்கு வழங்கப்படும் என்றும், 10 லட்சம் ரூபாய் காண காசோலையும் வழங்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.