இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரியில் தொழில் மேம்பாட்டு திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தனியார் மற்றும் பொது தொழில்நுட்பத்துறை கல்லூரிகள் கலந்து கொண்டது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அதாவது நாட்டில் தொழில் நுட்பத்திறன் தற்போது வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
இதனையடுத்து பாலம் 2022 என்பது ஆசிரியர்கள், தலைவர்கள், கல்வி உறுப்பினர்கள், தொழில் வல்லுனர்கள், மனிதவள தலைவர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி மற்றும் வேலை பற்றி விவாதிக்கும் முன்னேற்பாடு என்று கூறினார். தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஐ.சி.டி அகடமி மற்றும் எல்காட் நிறுவனம் மூலம் படித்த இளைஞர்களுக்கு இலவசமாக திறன் மேம்பாட்டு வளர்ச்சி பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
இந்த பயிற்சியை தனியார் மேற்கொள்ளும்போது 50 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. இதன் காரணமாகவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை படி ஐ.சி.டி மூலம் மற்றும் நிறுவனங்கள் மூலம் இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அமைச்சர் கூறியுள்ளார்.