தமிழகத்தில் மாவட்ட அரசு வேலை வாய்ப்பு மையங்களில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக அடிக்கடி தனியார் துறை வேலைவாய்ப்புகள் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது அரசு ஊரடங்கு தளர்வுகள் அறிவித்து வந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனால் வேலையற்ற இளைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தப்பட உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில் 5 வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி தெரிந்தவர்கள் பங்கேற்கலாம். இந்த முகாமில் கலந்துக் கொள்பவர்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை எடுத்து வர வேண்டும். மேலும் வேலை நாடுநர்கள் மற்றும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம். இந்த முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்ளுடைய அரசு வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் சலுகையாக சுயதொழில் செய்தவர்களுக்கு கடன் உதவிகள் பெறுவதற்கும் வேண்டிய வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது..