சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலின் தென் மண்டல அதிகாரி சுந்தரேசன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் “மதுரை, கோவை, சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு கும்பல் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் முத்திரையுடன் விண்ணப்பங்கள் வழங்கி போலியாக நேர்முக தேர்வு நடத்தி, அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது. அந்த கும்பல் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் மர்ம கும்பல் திருப்பத்துார் அருகே போலியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வரும் தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று திருப்பத்துாரைச் சேர்ந்த சூர்யா உட்பட 8 பேரை கைது செய்தனர். இவர்கள் 1.50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த கும்பலை போலவே மேலும் சிலர் தமிழகத்தின் பல பகுதிகளில் போலியாக நேர்முக தேர்வு நடத்தி, மோசடியில் ஈடுபட்டுள்ளதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல் அதிகாரிகள் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக நேர்முக தேர்வு நடத்துபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் ரொக்கமாகவோ, வங்கி மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலமாகவோ பண பரிமாற்றம் செய்ய வேண்டாம். அத்துடன்
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணம் கொடுத்து தான் வேலை வாங்க வேண்டும் என்று கூறுவோர் தொடர்பாக , அவசர போலீஸ் எண். 100 மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று அவர்கள் கூறினர்.