தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மருத்துவர்கள் தேவை அதிகரித்தது. இந்த சூழ்நிலையில் மருத்துவபடிப்பில் இறுதி ஆண்டு படித்துகொண்டிருந்த மாணவர்கள் மருத்துவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பல மாவட்டங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் தற்போது சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இதனால் தொற்று அதிகம் பரவிவரும் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின் இப்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஜூலை 10ஆம் தேதி தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. அதுமட்டுமின்றி மருத்துவ பணியிடங்களிலுள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது “தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது மருத்துவத்துறையிலுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் உள்ள 4,308 பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பப்பட இருக்கிறது. அந்த வகையில் இவர்கள் செப்டம்பர்மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அக்டோபர் மாத இறுதிக்குள் பணியில் அமர்த்தப்படுவார்கள்” என தெரிவித்துள்ளார்.