தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கத்தில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பி வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அத்துடன் போட்டித் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகி வருகிறது. தற்போது குரூப் 2, 2ஏ தேர்வு தேதி வெளியாகி இருக்கிறது. இதையடுத்து மார்ச் மாதத்தின் மத்தியில் குரூப்-4 &VAO தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் படித்த இளைஞர்களுக்கு உதவும் அடிப்படையில் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களை அடுத்து மார்ச் 12ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அதாவது அம்மாவட்டம் லாலாப்பேட்டையிலுள்ள ஜிகே.வேல்டு பள்ளியில் வரும் 12ம் தேதி காலை 8.30 -மாலை 4.30 மணி வரையிலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகவே தகுதியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு ஆகிய கல்வித்தகுதிகள் உடையோர் பங்கேற்கலாம். அவ்வாறு கலந்துகொள்ள வருபவர்கள் தங்களின் சுயவிவர குறிப்பு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வித் தகுதி சான்றிதழ் போன்றவற்றை கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.