திருட்டை தடுக்க முயன்ற காவலரை வாகனத்தில் கட்டி வைத்து தரதரவென இழுத்து இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் மூன்று இளைஞர்கள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வாகனத்தில் கட்டிவைத்து தரதரவென இழுத்து சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் துவங்கியுள்ளது. பெர்க்ஷாயரில் ரீடிங் பகுதி அருகே கரடுமுரடான சாலையில் இந்த கோர சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடந்துள்ளது. 28 வயதான போலீஸ் கான்ஸ்டபிளை சுமார் ஒரு மைல் தூரத்திற்கு வாகனத்தில் கட்டிவைத்து கரடுமுரடான சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர். அவரை கட்டி வைத்து இழுத்துச் சென்ற வாகனம் 42 மைல்கள் வேகத்தில் சென்றுள்ளது.
சம்பவம் நடந்த அன்று போலீஸ் கான்ஸ்டபிள் ஆண்ட்ரு ஹார்பர் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளார். தனது அன்றைய நாளுக்கான பணி முடிவதற்கு 4 மணி நேரமே இருந்த நிலையில் ஆண்ட்ரு ரீடிங் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தொடர்பு கொண்டதால் உதவிக்கு வந்த மற்றொரு கான்ஸ்டபிள் ஷா அவரைக் கண்ட போது உடல் சிதைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளித்துக் கொண்டிருந்தபோது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த விசாரணையில் வாகனத்தை ஓட்டி வந்ததாக 19 வயது ஹென்றி மற்றும் அவருடன் இருந்த 18 வயது ஆல்பர்ட் மற்றும் ஜெஸ்ஸி கோல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளில் விலை உயர்ந்த பைக் திருட முயற்சிக்கும் போது தடுத்ததால் அவரை கொலை செய்ததாக மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கின் விசாரணை 5 வாரங்களுக்கு தொடரும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.