வாலிபரை கொலை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள வெள்ளிவாயல் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களாக ரவிசந்திரன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கீர்த்தனா ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் எனக்கும் மதன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு வந்த மதன், பப்லு, ஜெயபிரகாஷ், பரத் ஆக்கிய 4 பேரும் ரவிச்சந்திரனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் ரவிச்சந்திரனை பல இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் வெற்றி நகர் பகுதியில் முகம் சிதைக்கப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரனின் குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரவிச்சந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவிச்சந்திரனை கொலை செய்த மதன், பப்லு, ஜெயபிரகாஷ், பரத் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.