நாமக்கல் மாவட்டத்திலுள்ள மேற்கு பாலப்பட்டியில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியை போன்று உடையணியும் வழக்கம் கொண்டவர். இதில் ரமேஷ் எந்த தேர்தல் வந்தாலும் அங்கு முதல் ஆளாய் வேட்பு மனு தாக்கல் செய்து நூதனமான பிரச்சாரத்தை மேற்கொள்வது வழக்கம் ஆகும். அந்த வகையில் நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலிலும் முதல்ஆளாய் காந்தி ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள தமக்கு 4 ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடனாக கேட்டு சென்னை ராஜாஜி சாலையிலுள்ள ரிசர்வ் வங்கியில் ரமேஷ் விண்ணப்பம் செய்துள்ளார். இப்பணத்தை கொண்டு குடியரசு தலைவராக தன்னை தேர்ந்தெடுக்கவுள்ள பிரதமர், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ என மொத்தம் 4 ஆயிரத்து 809 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்க இருப்பதாகபும், அதற்காக தன்னுடைய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவற்றை வைத்து 4,809 ரூபாய் வட்டி இல்லா கடனாகவோ (அல்லது) மானியமாக வழங்க வேண்டும் என தெரிவித்து ரிசர்வ் வங்கியில் அவர் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் ரமேஷின் மனுவை பார்த்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின் மனுவை பெற்றுகொண்டு உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக வங்கி அதிகாரிகள் ரமேஷிடம் தெரிவித்து உள்ளனர். தற்போது ரிசர்வ் வங்கியிடம் கோடிகணக்கில் கடன் கேட்ட ரமேஷின் செயல் வைரலாகி வருகிறது.