பிரிட்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் ராஜபக்சே பதவி விலக வேண்டுமென கூறி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றம் நாளை மறுநாள் கூட இருக்கின்ற நிலையில் அந்த நாட்டு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென கோரி பிரிட்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கின்றது. அந்நிய செலவாணி பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் உணவு, சமையல் எரிவாயு, எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் இவை அனைத்திற்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினரே பொறுப்பு எனக்கூறி இலங்கையில் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து இருக்கின்றது. இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பங்கேற்றனர். இதேபோல நியூசிலாந்து நாட்டின் வெல்லிங்டன் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை வம்சாவளி மக்கள் போராட்டம் நடத்தினர். பதவி விலகுக கோத்தபய என எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்திக் கொண்டும் அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டம் உச்சம் பெற்ற நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நாளை மறுநாள் கூடுகின்றது.
நாடாளுமன்றத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மீதான தகுதிநீக்க தீர்மானம, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகின்றது. ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திர கட்சி ராஜபக்சேவுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதால் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. அதனால் தேசிய அரசு ஒன்றை உருவாக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்து வருகின்றார். இந்நிலையில் இதற்கு வசதியாக பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவை நீக்கவும் அவர் முன் முன்வந்துள்ளார்.