இவருக்கு எதிராக பந்து வீச ஆசைப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ கூறியுள்ளார்..
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பிரட்லீ 1999 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் தன்னுடைய அசுரவேக பந்து வீச்சினால் எதிரணிகளை திணறடிப்பார். 3 வகையான கிரிக்கெட்டிலும் இதுவரை அவர் 718 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக நிறைய வெற்றிகளை அவர் பெற்றுக் கொடுத்துள்ளார். உதாரணமாக 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர். இவர் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களான சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா போன்றவர்களை திணறடித்து பலமுறை அவுட் செய்திருக்கிறார்..
அதேபோல ராகுல் டிராவிட் போன்ற தரமான பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக விளங்கிய இவர், நிறைய இளம்வீரர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார். இவருடைய காலத்தில் சச்சின் போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் நிறைய சமயங்களில் மிக சவாலாக இருந்துள்ளார்கள். அதேசமயம் சச்சினை விட முதல் பந்தில் இருந்தே தாக்குதலை ஆரம்பிக்கும் சேவாக் போன்ற பேட்ஸ்மேன்கள் பவுலடர்களுக்கு கருணையே காட்டாமல் அதிரடியாக ஆடுவதால் அவருக்கு பந்து வீசுவது கடினம் என்று சமீபத்தில் பிரட் லீ அவரை புகழ்ந்து பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் சச்சின், சேவாக், விராட் கோலி போன்ற உலகத்தரம் மிக்க இந்திய பேட்ஸ்மேன்களை நான் பார்த்து விட்டேன் என்று தெரிவிக்கும் பிரெட் லீ, தற்போதுள்ள இளம்வீரரான ரிஷப் பண்டுக்கு எதிராக பந்து வீச விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மிரட்டிவரும் ரிஷப் பண்ட் :
கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகமான ரிசப் பண்ட் 3 வகையான கிரிக்கெட்டிலும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பிங்கில் அவர் அசத்தி வருகிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதம் அடித்துள்ள முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையும் இவர் படைத்து இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பலரும் பொறுமையாக தான் ஆடுவார்கள்.
ஆனால் இவர் வீரேந்திர சேவாக் போல எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அதைப்பற்றி கவலையே படாமல் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பார்.. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் மிகச் சிறப்பாக ஆடியதை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதே போல காபா மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் 89 ரன்களை அவர் விளாசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஒரு இன்னிங்ஸ் விளையாடி வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
அதேபோல வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடக்க காலத்தில் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்பட்ட ரிஷப் பண்ட் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரில் கடைசி போட்டியில் சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.. 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் வருங்கால இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நான் விளையாடினால் ரிஷப் பண்ட்டுக்கு எதிராக பந்து வீச ஆசைப்படுவதாக பிரெட் லீ கூறியுள்ளார்.. இது பற்றி அவர் கூறியதாவது, எனது காலகட்டத்தில் சச்சின், வீரேந்தர் சேவாக் ஆகியோருக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல விராட் கோலியின் ஆரம்ப காலத்திலும் அவருக்கு எதிராக பந்து வீசி இருக்கிறேன். இருப்பினும் தற்போது ரிஷப் பண்ட் போன்ற திறமையான வீரருக்கு எதிராக நான் பந்து வீச மிகவும் ஆவலாக இருப்பதாக நினைக்கிறேன்.. அவர் மிகவும் அதிரடியாக ஆடி கிரீசுக்குள் சுற்றி நடந்து பேட்டிங் செய்வார். நானே சவால் செய்ய நினைக்கும் ஒரு வீரர் ரிசப் பண்ட். சமீபத்தில் அவரை சந்தித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவரது பேட்டிங் வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் பந்து வீசுவது மிக கடினமாக இருக்கும்” என்று தெரிவித்தார்..