திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்கோலம் பகுதியில் வசித்து வரும் நந்தன் ( வயது 65 ) என்ற முதியவர் ரேஷன் கடையில் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் புளி பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நந்தன் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சியிடம் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து கூறியுள்ளார்.
ஆனால் நந்தன் தேவை இல்லாமல் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வருவதாக கூறி காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் நந்தனின் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நந்தனின் மகன் குப்புசாமி ( வயது 35 ) திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை திரு.நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற திரு.குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது,
அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும்,
1/2 pic.twitter.com/uvmc85cKvF— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 12, 2022
இதையடுத்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குப்புசாமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறி புகார் அளித்த தந்தை நந்தனின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் மனவேதனையில் குப்புசாமி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த செய்தி மனதிற்கு பெரும் வேதனையை அளிக்கிறது. குப்புசாமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்று டுவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றை போட்டுள்ளார். மேலும் திமுக கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி எழுப்பினால் மரணம் தான் பதிலாக கிடைக்கிறது. “இது தற்கொலை அல்ல ஜனநாயக படுகொலை” என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.