தமிழக உளவுத் துறை தனது தொலைபேசியை ஒட்டுக் கேட்பதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். சென்னை தி.நகரிலுள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க தலைவரான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு இச்ம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகாமை விசாரிக்க வேண்டும். இதையடுத்து தடயங்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்னதாகவே சம்பவம் நடந்த இடத்தை காவல்துறை வந்து சுத்தம் செய்தது ஏன்? என்று தெரியவில்லை.
இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். இச்சம்பவம் எங்கள் உறுதியை குலைக்காது. யாரை வைத்து வேட்பாளர்களை மிரட்டினாலும் கூட தேர்தல் பணிமனையை, சூறையாடினாலும்கூட பா.ஜ.க. மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வரும். இந்த விஷயத்தில் ஆளும் கட்சி ஒரு சுய பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதற்கு உதாரணமாக பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நீட் தேர்வுக்காக பா.ஜ.க அலுவலகத்தில் குண்டு வீசினார் எனக் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையை செய்தது என்னுடைய பாதுகாப்பை குறைத்தது. அதாவது “ஒய்” பாதுகாப்பில் இருந்து ‘எக்ஸ்’ பாதுகாப்புக்கு குறைக்கப்பட்டுள்ளது. எனக்கும் எனது வீட்டிற்கும் தற்போது ஒரே ஒரு துப்பாக்கி ஏந்திய காவலர் மட்டுமே இருக்கிறார். ஆனால் எனக்கு அதுவும் கூட தேவையில்லை. இதற்கிடையில் தன்னுடைய தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழக உளவுத்துறை போனை “பக்” செய்வது, என்னைச் சுற்றி வருவது, உடன் இருப்பவர்களை வைத்துக் கண்காணிப்பது என ஒட்டுக்கேட்பின் அடுத்த நிலைகளுக்குச் சென்றுவிட்டது.
அதன்பின் பாஜக அலுவலகம் இருக்கும் இந்த சாலையில் இருபுறமும் உள்ள பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது. இவையெல்லாம் நீங்களே யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இதற்கெல்லாம் பணிந்து போகும் ஆட்கள் நாங்கள் இல்லை. எந்த நோக்கத்திற்காக இப்படி செய்தார்கள் என்பதை அரசு தான் கூற வேண்டும். தொலைபேசி ஒட்டுகேட்கப்படுகிறது என்பதற்கு பொது வெளியிலே பல ஆதாரங்கள் இருக்கின்றன. உளவுத்துறை நான் பேசும் ஒரு மெசேஜை எடுத்து செயலிலுள்ள ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பி ‘பிரேக்கிங்’ என்று வெளியிடுகிறார்கள். தற்போது தமிழகத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.