Categories
மாநில செய்திகள்

“இவங்க கிட்ட வந்து நான் மாட்டிக்கிட்டேன்” சினிமாவுல மட்டும் வாய்ப்பு கிடைச்சிருந்தா நடிகனாகியிருப்பேன் ….. ஜாலியாக பேசிய அமைச்சர்…..!!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சன்பீம் தனியார் பள்ளியில் அகநானூறு புத்தகத்துக்கு சாலமன் பாப்பையா எழுதிய உரைநூல் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சாலமன் பாப்பையா, அமைச்சர் துரைமுருகன், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பள்ளியின் தாளாளர் ஹரி கோபாலன் மற்றும் தங்க பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உரைநூல் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சாலமன் பாப்பையா சேர்ந்து வெளியிட்டனர். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் பேசியதாவது, நான் இன்று டென்மார்க்கிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் சாலமன் பாப்பையாவின் உரைநூல் புத்தகத்தை காண வேண்டும் என்பதற்காக டென்மார்க் பயணத்தை ரத்து செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன்.

ஒருவேளை நான் டென்மார்க் சென்றிருந்தால் தமிழ் மொழியை அவமதிப்பது போன்றதாகும். அதோடு ஒரு தமிழ் அறிஞரை புறக்கணித்து விட்டேன் என்ற பழிச் சொல்லுக்கும் ஆளாகி விடுவேன். இதன் காரணமாகத்தான் நான் விழாவில் கலந்து கொண்டேன். சாலமன் பாப்பையா ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். தமிழ் மொழியை நன்கு அறிந்தவர். அவர் என்னிடம் நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச வேண்டும் என்று கூறிய போது தூக்கி வாரி போட்டது. ஏனெனில் நான் தமிழ் மொழி படித்தவன் கிடையாது. பிஏ எக்கனாமிக்ஸ், எம்ஏ பாலிடிக்ஸ் மற்றும் வழக்கறிஞருக்கு படித்துள்ளேன். நான் கோனார் தமிழ் உரையை வைத்து தான் தமிழ் படித்திருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எனக்கு தற்போது ஒன்று தோன்றுகிறது. அதாவது நான் 2 சினிமாக்காரர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டேன். சாலமன் பாப்பையாவும், ராஜாவும் நடிகர்கள். எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை வாய்ப்பு கிடைத்திருந்தால் கண்டிப்பாக நானும் சினிமாவில் நடிக்க போயிருப்பேன். தமிழ் இலக்கியத்தில் சங்க நூல் இலக்கியம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் 5000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரைக்கும் புத்தகம் வாங்குவேன். என்னுடைய நூலகத்தில் 30-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கிறது. அந்த புத்தகங்களை பார்த்தாலே எனக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். எனவே பள்ளி குழந்தைகளே நன்றாக படியுங்கள். படிப்பு மட்டும் தான் உங்களை உயர்த்தும் என்றார்.

Categories

Tech |